கிம்மின் தோற்றத்தை கண்டு கண்ணீர் விடும் மக்கள்

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குறித்து அண்மை காலமாக சர்வதேச இடங்களில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய சமயத்தில் கிம் ஜாங் அன் பல மாதங்கள் வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

இதனால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், இறந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் உலா வந்தன. எனினும் கிம் ஜாங் அன் சில மாதங்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் மீண்டும் சில மாதங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த கிம் ஜாங் அன், அண்மையில் ஆளும் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது கிம் ஜாங் அன் வழக்கத்தை விடவும் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.‌ இதனால் அவரது உடல்நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் மீண்டும் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் கிம் ஜாங் அன்னின் தற்போதைய தோற்றம் கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டிருப்பதாக அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது அடையாளங்களை வெளியிட விரும்பாத வடகொரிய பிரஜை ஒருவர், “கிம்மின் தோற்றத்தை நாங்கள் பார்த்தபோது எங்கள் மக்களின் இதயம் மிகவும் வேதனை அடைந்தது. அவரை பார்க்கிறபோது இயற்கையாகவே தங்கள் கண்ணில் கண்ணீர் வழிவதாக எல்லோரும் கூறுகின்றனர்” என தெரிவித்தார்.