இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என, நுகர்வோரை எச்சரிக்கும் வகையில் வாகன விற்பனையாளர்களை அறிவுறுத்த வேண்டும்’ என தமிழக போக்குவரத்துத் துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களில் பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க ரியர்-வ்யூ கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

பல இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த கண்ணாடிகளை அகற்றிவிட்டு ஓட்டுவதாகவும், இதனால் விபத்து அதிகரிப்பதாகவும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‛தமிழ்நாடு மாநில மோட்டார் வாகன சட்டப்படி, கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் இயக்குவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும்,’ எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ‛இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்,’ என தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. மேலும், நீதிபதிகள் கூறுகையில், ‛‛இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும்படி வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இதுசம்பந்தமாக வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களையும் அறிவுறுத்தலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.