அடுத்த முறையும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்- அண்ணாமலை

தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் வெற்றிப்பெற்று பா.ஜ., ஆட்சி அமைக்கும் என தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை நாளை (ஜூலை 16) பொறுப்பேற்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று சென்னை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக வரவேற்பு அளிக்க பா.ஜ.,வினர் திட்டமிட்டுருந்தனர். அதன்படி, இன்று தனது சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்திற்கு சென்ற அண்ணாமலைக்கு அம்மாவட்ட பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கரூர் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை பேசியதாவது: நான் கரூரை சார்ந்தவன் தான். அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டேன். என்னைப் பற்றி அதிகம் தெரிந்த உங்களிடம் அதிகம் பேச வேண்டியதில்லை.

தமிழகத்திலுள்ள 13 ஆயிரம் கிராமங்களுக்கும் பா.ஜ.,வின் கொடி, கொள்கைகளை, சித்தாந்தத்தை உங்கள் ஒத்துழைப்போடு எடுத்துச் செல்ல வேண்டும். கரூர் மாவட்டத்தில் பா.ஜ., அசுர வளர்ச்சி பெறும். ஆறு மாதத்தில் நீங்கள் அதை பார்ப்பீர்கள். கரூர் மாவட்டம் வித்தியாசமான மாவட்டம். ஆகவே, கரூரில் பா.ஜ.,வின் அரசியலும் வித்தியாசமாக இருக்கும். தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களை கொண்ட நமது கட்சி ஐந்து வருடத்தில் 150 சட்டசபை உறுப்பினர்களுடன் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.