திருப்பதி தேவஸ்தான தலைவருக்கு குருவாயூர் கோவிலில் தடை!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும், கேரளாவில் இன்னும் கொரோனோ தொற்று தீவிரமாக உள்ளது.இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் ஊழியர்களுக்கும், குருவாயூர் கோவிலில் பூசாரிகள் உட்பட ஊழியர்களுக்கும் கொரோனா பரவியது.

இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா நாயுடு நேற்று குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய வருவதாக குருவாயூர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.

அவர் தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வந்தது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவருக்கு தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்த பாஜக தீர்மானித்தது. இதுகுறித்து உடனடியாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா நாயுடுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் குருவாயூர் வருகையை ரத்து செய்தார்.