கொரோனா இல்லாத நாடாக வலம் வரும் தைவான்

உலகெங்கிலும் பல நாடுகள் கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தைவான் நாட்டில் கடந்த 200 நாள்களாக உள்நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை சந்தித்து வரும் நிலையில், தைவான் நாட்டில் ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு பிறகு உள்நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகாதது வியப்பூட்டுகிறது. இதுவரை தைவானில் மொத்தம் 553 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா கட்டுப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக, கொரோனா தொற்றை தடுக்கும் முக்கிய நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை கண்டிப்பான முறையில் அமல்படுத்தியதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும், எல்லைக் கட்டுப்பாடு என்பது தைவானால் கண்டிப்பாக பின்பற்றப்பட்ட மிக முக்கியமான நெறிமுறைகளில் ஒன்றாகும். ஜனவரி மாதம் தொற்றுநோய் வெடித்த சிறிது காலத்திலேயே தைவான் அதன் எல்லைகளை மூடியது குறிப்பிடத்தக்கது.