மாற்றுத் திறனாளிகள் கூடுதல் பொங்கல் பரிசு கோர முடியாது – தமிழக அரசு

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த 21ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, பொங்கல் பரிசு தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 விழுக்காடு கூடுதலாக வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்துவிதமான மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவில், 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் வழங்கப்படும் தொகைகளில், 25 விழுக்காடு கூடுதலாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர், பொங்கல் பரிசு குடும்பத்துக்கு வழங்கப்படுகிறதே தவிர தனி நபர்களுக்கு அல்ல என்பதால், மாற்றுத் திறனாளிகள் சட்டப்பிரிவு இத்திட்டத்துக்குப் பொருந்தாது என்றார்.