பணமாக்குதல் பற்றி ராகுலுக்கு தெரியுமா?

மத்திய அரசு சமீபத்தில் அரசு சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தை அறிவித்தது. அதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இதனை காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு இத்திட்டத்தை பற்றிய புரிதல் உண்டா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவிட் பெருந்தொற்றால் போடப்பட்ட ஊரடங்கினால் உலக பொருளாதாரம் சரிவை சந்தித்தது. இந்திய உள்நாட்டு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதார சரிவிலிருந்து மீள 20 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்தது. பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை விற்பனை செய்து பணமாக்குகிறது. அதன் தொடர்ச்சியாக அரசின் சொத்துக்களை குத்தகைக்குவிடும், தேசிய பணமாக்குதல் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் அரசின் இம்முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேட்டியளித்தார். “அரசின் சொத்துக்களை குத்தகைக்குவிடும் மத்திய அரசின் முடிவு தவறானது. நீண்டகாலமாக நஷ்டத்தில் இருக்கும் தொழில்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். ஆனால் பா.ஜ. அரசு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த சொத்துக்களை வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு அளிக்கிறது.” என்றார்.