வாஸ்துப்படி மாற்றி அமைக்கப்படும் அமைச்சர்களின் பங்களாக்கள்..!

புதிய அமைச்சர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பங்களாக்களை, வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்காக 70 அரசு பங்களாக்கள் உள்ளன. இவற்றை பொதுப்பணி துறையினர் பராமரித்து வருகின்றனர்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில் 30 அமைச்சர்களுக்கு, பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

முதல்வர் ஸ்டாலின், தனக்கு பங்களா வேண்டாம் என்று கூறி விட்டார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், வேலு ஆகியோர் சென்னையில் வசிப்பதால், அவர்களுக்கும் அரசு பங்
களாக்கள் ஒதுக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.., வேண்டுகோளை ஏற்று, அவர் தங்கியுள்ள பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்களாக்களை காலி செய்து வருகின்றனர். ஐந்து பேர் இன்னும் காலி செய்யவில்லை. இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களில் வாஸ்துப்படி சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் தி.மு.க., அமைச்சர்கள் பலர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களது வீட்டை வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, புதிதாக படுக்கை, சோபா, நாற்காலிகள், மின் விசிறி, ‘ஏசி’ மற்றும் மின் விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.