தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவியது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலில் 2-வது அலைகடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதை தடுக்க தமிழக அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளன. ஆனாலும் தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், பக்கத்து மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும், 30-4-2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும், பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தவறுவதாலும் சமீப காலத்தில் கொரோனா நோய்த்தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக 28-3-2021 அன்று 13 ஆயிரத்து 70 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 23-4-2021 அன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 48 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அதன்படி, அனைத்து சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.