ஜனவரியில் புதிய தலைவர்; தயாராகிறது காங்., மேலிடம்

காங்., பொதுக்குழு உறுப்பினர்களின் விபரங்களை அனுப்பி வைக்கும்படி, மாநில தலைவர்களுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. இதனால், வரும் ஜனவரியில், காங்கிரஸ் பொதுக்குழு கூடி, புதிய தலைவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரசுக்கு முழுநேர தலைவரை நியமிக்க வலியறுத்தி, மூத்த நிர்வாகிகள் பலரும், சமீபத்தில் போர்க்கொடி உயர்த்தியதால், கட்சியில் நெருக்கடி ஏற்பட்டது.சுமுக தீர்வாக ஆறு மாத காலத்துக்கு, இடைக்கால தலைவரான சோனியா நீடிப்பார் என்றும், அதற்குள் புதிய தலைவரை தேர்வு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. விதிகளின்படி, அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழுவில் தான், உறுப்பினர்கள் கூடி, தேர்தல் வாயிலாக, புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.

இதனால், முதல்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை, அமைப்பு தேர்தல் என, பணிகள் வேகம் பிடித்தன. மூத்த தலைவர் மதுசுதன் மிஸ்ரி தலைமையிலான தேர்தல் குழு அமைக்கப்பட்டு, அனைத்தையும் ஆராய்ந்து வந்தது. இந்நிலையில், கட்சியின் மாநில தலைவர்களுக்கு, இக்குழுவின் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: விரைவில் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு கூடவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடக்கின்றன. தேதி மற்றும் இடம் உள்ளிட்ட விபரங்கள், உரிய முறையில் தெரிவிக்கப்படும். மாநிலத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி, மொபைல் எண், புகைப்படம் உள்ளிட்ட, அனைத்து விபரங்களுடன் கூடிய பட்டியலை அனுப்பி வைக்கவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்களில் சிலர் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர். இதனால், புதிய பட்டியல் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டியல் தயாரானதும், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படும்.

உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு அல்லது ஒருமனதாகவோ, புதிய தலைவரை தேர்வு செய்து, காங்கிரஸ் மாநாட்டில், அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இதனால், வரும் ஜனவரியில், புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.