ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற்றம்!!!

பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நலன்களுக்காக கடந்த 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றியம். இதில் உறுப்பினர்களாக உள்ள 28 நாடுகள் தடையற்ற வர்த்தகம், போக்குவரத்து, ஒரே நாணயம் ஆகிய பலன்களை அனுபவித்து வருகின்றன.

இந்நிலையில், பிரிட்டனின் வேலைவாய்ப்புகள் பறிபோவதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது . இது தொடர்பாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பெரும்பாலான பொதுமக்கள் வாக்களித்தனர்.

இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டாலும், இருதரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

கடந்த கிறிஸ்துமஸ் நாளன்று வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கையெழுத்திட்டதால், வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறியது. லண்டனில் உள்ள பிக்பென் கடிகாரம் மணி அடித்து இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த சட்டதிட்டங்களையும் பிரிட்டன் பின்பற்றாது என்பதால், அங்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், எல்லையில் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வருபவர்கள் 90 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால், விசா வாங்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எவ்வித கூடுதல் வரிகளும் விதிக்கப்படாது என பிரிட்டன் ஒப்பந்தம் செய்திருந்தாலும், மதுபானம், சிகரெட் போன்ற பொருட்களை எடுத்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரிட்டனில் விலையேற்றம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் உள்ளிட்ட பலவற்றில் விவேகமான முடிவுகளை எடுக்கலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.