Weather Warning: தமிழகத்தை நோக்கி வரும் புயல்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை

Weather Warning: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நூறு ஆண்டுகளில் முதன்முறையாக மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து புயல்களில் எந்த புயலும் தமிழகத்தை நோக்கி நகரவில்லை. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி வரக்கூடும்” என்று கூறினார்.

இதன் காரணமாக 03.03.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

04.03.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் [தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை] புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05.03.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

06.03.2022: கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

07.03.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Cyclone brewing? Depression over southwest Bay of Bengal, weather warning for Tamil Nadu coast

இதையும் படிங்க: TN students: மாணவர்களுக்கு வாரந்தோறும் கூட்டு உடற்பயிற்சி நடத்த வேண்டும்- பள்ளிக் கல்வி துறை