விந்தையான குரலில் சத்தம் போட்டு மயங்கி விழும் ஆந்திர மக்கள்

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில், அடையாளம் காணப்படாத ஒரு வித நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமையுடன் 428ஐ எட்டியது. அங்கு 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் மர்ம நோய் பாதிப்புடன் சேரும் பொதுமக்களை மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டு நலம் விசாரித்தார். அங்கு மருத்துவர்களிடமும் மர்ம நோய் தாக்கம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், ஏலூரு மாவட்டத்தில் நோய் தன்மை தொடர்பாக பார்வையிட டெல்லியில் இருந்து எய்ம்ஸ் குழு ஆந்திரா வந்துள்ளது. அந்த குழுவில் டாக்டர் ஜாம்ஷெட் நாயர், டாக்டர் அவிநாஷ் டிசோஷ்தவர், டாக்டர் சான்கேத் குல்கர்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுடைய கள ஆய்வு மதிப்பீட்டை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் வழங்குமாறு இந்திய சுகாதாரத்துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.