இனரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்கள்-மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, மைதானத்தின் பவுண்டரி எல்லையில் இருந்த முகமது சிராஜை, அங்கிருந்த ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். இதையடுத்து முகமது சிராஜ், அணி கேப்டன் ரஹானேவிடன் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

பின்னர் ரஹானே இதுகுறித்து கள நடுவர்களிடம் முறையிட்டார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்கள், முகமது சிராஜை இன ரீதியாக விமர்சித்ததாக 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றினார். அதன்பின் ஆட்டம் தொடங்கியது.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு, பாதுகாப்பு தலைவர் சீன் கரோல் கூறுகையில், ”சிட்னி டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களின் இச்செயலுக்கு இந்திய வீரர்களிடம் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்பதையும் தெரிவிக்கிறேன்.

இதில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மனம், உடல் ரீதியாக காயப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் உறுதியளிக்கிறோம்.

மேலும் அந்நபர்கள் மீது தடை மற்றும், காவல்துறை ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையிடம் கலந்தாலோசித்து வருகிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை நிச்சயம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆதரிக்காது என்பதையும் ரசிகர்கள் உணரவேண்டும்” என்று தெரிவித்தார்.