நகை கடைகள் திறக்க வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய் தொற்று அதிகமாக இருந்ததால் அங்கு ஒருசில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.

ஏற்கனவே அறிவித்த தளர்வுகள் அடிப்படையில் தற்போது நகை, ஜவுளிக்கடை, மால்கள் தவிர அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விட்டன. நகை, ஜவுளிக்கடைகளையும் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. 4.6 சதவீதத்துக்கும் கீழ் தற்போது தொற்று உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த மாதம் 21-ந் தேதி 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கடந்த மாதம் 30-ந்தேதி 493 பேர் பலியானார்கள்.

இன்று மருத்துவக் குழுவுடன் ஆய்வு நடத்தப்பட்டது. 4 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு குறைந்த மற்ற மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர மீதம் உள்ள 23 மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்தை தொடங்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

போக்குவரத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் உள்ளன. சில இடங்களுக்கு இ-பாஸ், இ-பதிவு மூலமே செல்ல வேண்டும் என்ற நிலைமை உள்ளது. இதிலும் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன் காரணமாக 23 மாவட்டங்களில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வெளியூர் பஸ்களும் சில கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளை மட்டும் திறக்கலாமா? என்றும் ஆலோசனைநடத்தினார்கள். எனவே இந்த கடைகளுக்கும் அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.