வரும் 8ம் தேதி முதல் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் எம்பிபிஎஸ், இன்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடைபெறுகிறது. சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் சென்டாக்கில் விண்ணப்பித்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பின்னர், ஆன்லைன் கலந்தாய்வு மூலம் அவர்களுக்கான பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகள் ஒதுக்கப்படுகின்றன.

அதன்படி சமீபத்தில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், எம்பிபிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் நிலவியது.

இந்நிலையில், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வு அடிப்படையிலான படிப்புகளான எம்பிபிஎஸ், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடங்களுக்கு சென்டாக் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை வருகிற 8ம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் வருகிற 22ம் தேதி ஆகும். இதுதொடர்பான மேலும் விவரங்களை சென்டாக் இணைய தளத்தில் (www.centacpuducherry.in) காணலாம் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: