போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் மர்மான முறையில் மரணம்

மதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் மர்மான முறையில் மரணம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சாப்டூர் அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சதுரகிரி மகாலிங்கம் கோயில் மலையடிவார வாழைத்தோப்பு பகுதியில் வசிக்கின்றனர். இதில் கன்னியப்பன் மகன் ரமேஷ் (17) நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் படித்து வருகிறார். இவருடைய அண்ணன் இதயக்கனி (26) இதே ஊரைச்சேர்ந்த உறவினர் மகள் புனிதாவை காதலித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். புனிதாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் சாப்டூர் போலீசார் ரமேஷ் மற்றும் குடும்பத்தினரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் ரமேஷை சாப்டூர் எஸ்ஐ ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் விசாரணைக்கென காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். திரும்ப அனுப்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை வாழைத்தோப்பு பெருமாள்குட்டம்பாறை உச்சியில் ஒரு மரத்தில் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த பொதுமக்கள் திரண்டனர்.

உடலை மீட்க முயன்ற போலீசாரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். ‘விசாரணைக்கு அழைத்து சென்று ரமேஷை போலீசார் அடித்து கொலை செய்து விட்டனர். இதற்கு போலீசார்தான் காரணம்’ என்று கூறி முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ரமேஷின் அண்ணன் சந்தோஷ், கொடுத்த புகார்மனுவில், ‘‘எங்களை அடிக்கடி சாப்டூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து என்னையும், எனது அம்மாவையும் அடித்தனர். எனது தம்பி ரமேஷை விசாரணை என்ற பெயரில் போலீசார் அடித்து கொலை செய்து விட்டனர்.

இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், ரூ.25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்கவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here