Lata Mangeshkar: லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்

Lata Mangeshkar
லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்

Lata Mangeshkar: இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், கொரோனா பாதிப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த 8-ம்தேதி மும்பையின் பிரபல பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 92 வயதாகும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக லதா மங்கேஷ்கரின் நெருங்கிய நண்பர் அனுஷா ஸ்ரீனிவாசன் கூறுகையில், ‘லதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை நாங்கள் உணர்ந்தோம். இன்னும் அவர் எத்தனை நாட்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் இருப்பார் என்பதை எங்களால் சொல்ல முடியாது.

மருத்துவர் பிரதித் சமதானி தலைமையிலான குழுவினர் லதா மங்கேஷ்கருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அவரது உடல்நிலை தொடர்பாக தவறான எந்த தகவலையும் ரசிகர்கள் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இந்த நேரத்தில் லதா மங்கேஷ்கர் தொடர்பாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களை பகிரக் கூடாது. இதுவே அவரது குடும்பத்தினருக்கும், சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும் நாம் செய்யும் உதவியாக அமையும்.’ என்றார்.

லதா மங்கேஷ்கர் பாடகியாக தனது வாழ்க்கைப் பயணத்தை 13 வயதில் 1942-ல் தொடங்கினார். தற்போது வரை அவர் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை சினிமாவில் பாடியுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாஹேப் பால்கே உள்பட ஏராளமான விருதுகளை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: TASMAC: மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை