டெல்லி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. தற்போது சுமார் 25 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் நாடுமுழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் கணிசமானவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிர் இழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்- மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், “ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் விமானப்படைகள் ஒருங்கிணைந்து ஆக்சிஜன் வினியோக பணியில் ஈடுபட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து ஆக்சிஜன் உற்பத்தி அளவை மேம்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யவும் மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து நாடுமுழுவதும் ஆக்சிஜன் வினியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் நள்ளிரவில் 20 நோயாளிகள் பலியாகி உள்ளனர். இதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அரை மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்பதால், 200 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மத்திய- மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக ஆக்சிஜனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

டெல்லி சுகாதார மந்திரி இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்த்தனை போனில் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 200 பேரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே டெல்லி மருத்துவமனையில் 25 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து இருந்தனர்.

தற்போது மேலும் 20 பேர் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் இழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.