Jewel Loan : மார்ச்-31க்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும்- அமைச்சர் ஐ.பெரியசாமி

Jewel Loan
மார்ச்-31க்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும்

Jewel Loan: தமிழகத்தில் வரும் மார்ச்-31ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கி பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசு வெளியிடப்பட்டது.

நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து, விவரங்கள் தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: Bus Accident in Karnataka : கர்நாடகாவில் பேருந்து விபத்து

அதன்படி, நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 14 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. இதை தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு முதற்கட்டமாக அதற்கான சான்றிதழ்களும் பின்னர் நகைகளும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் மார்ச்-31ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் 165 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, மக்களின் குறைகளை அறிந்து உணர்ந்து அதை தீர்க்க தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பொது நகைக்கடன் தள்ளுபடி இதுவரை வேறு எந்த ஆட்சியாளர்களும் கொடுத்ததில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அறிவித்த திட்டங்களின் பலனை அனைவருக்கும் முதலமைச்சர் கொண்டு சேர்க்கிறார்.

வரும் 31ம் தேதிக்குள் தமிழகத்திலுள்ள 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தள்ளுபடி சான்றிதழ், 5 சவரன் நகை திருப்பி தரப்படும் என்றும், விடுபட்ட தகுதியான நபர்கள் விண்ணப்பித்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், போலி ஆவணம், போலி நகைகள் மூலம் நகைக்கடன் பெற்ற நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Coconut Sapling: வீடுகள்தோறும் இலவச தென்னங்கன்று