கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆரவாரம் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட்

கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆரவாரம் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் அரங்கேறப்போகிறது.

13ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நாளை (சனிக்கிழமை) முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் அபுதாபியில் நாளை (இரவு 7.30 மணி) மோதுகின்றன.

ஐ.பி.எல். சரவெடி என்றாலே பந்து சிக்சர், பவுண்டரிக்கு ஓடும் போது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும், சியர்லீடர்ஸ் எனப்படும் நடன அழகிகளின் கலக்கல் நடனம்தான் நினைவுக்கு வரும். ஆனால் கொரோனா அச்சத்தால் இந்த தடவை ரசிகர்கள், நடன அழகிகள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானங்களில் போட்டி அரங்கேறுகிறது. இதனால் ரன் அடிக்கும் போதோ அல்லது விக்கெட் விழும் போதோ ரசிகர்கள் உற்சாகத்தில் கரவொலி எழுப்பும் பழைய வீடியோ காட்சியை ஸ்டேடியத்தில் உள்ள மெகா திரையில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அனைத்து அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்துதல், 3 முறை கொரோனா பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை முடித்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இனி போட்டியின் போது ஒவ்வொரு 5 நாள் இடைவெளியிலும் வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும். எந்த அணி வீரருக்காவது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். 14 நாள் முடிந்து இரண்டு முறை கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகே மறுபடியும் அணியின் மருத்துவ பாதுகாப்பு சூழலுக்குள் நுழைய முடியும்.

ரசிகர்கள் பட்டாளம் இன்றி விளையாடுவது வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் டி.வி.யின் மூலம் இந்த போட்டியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இந்த கொரோனா காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால் தான் இந்த போட்டி வேறு வழியின்றி அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஐ.பி.எல். போட்டியை நடத்துவதால் டி.வி. ஒளிபரப்பு உரிமம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் ஏறக்குறைய ரூ.4 ஆயிரம் கோடி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here