சென்னையில் 2 நாட்களுக்கு மீண்டும் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. அதில் இருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடதமிழகம் நோக்கி கடந்த 10-ந் தேதி நகர்ந்து வந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தது.

கடந்த 11-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடந்தது. அப்போது மிக கனமழை கொட்டியது. எனவே சென்னை நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் சென்னை மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதன் பிறகு மழை சற்று ஓய்ந்ததால் நிலைமை சீரடைந்து வந்தது.

இந்தநிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் பலத்த மழை கொட்டும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

அந்தமான் அருகே புதிதாக உருவாகி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி இருக்கிறது. அது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. வருகிற 17-ந் தேதி அளவில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு இடைப்பட்ட இடத்தை நோக்கி வரும். 18-ந் தேதி கரையை கடக்கும்.