பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

இழப்பதற்கு இனி ஏதும் இல்லை; இது பாகிஸ்தானின் நிலை. ஏனெனில் அக்டோபர் 21-ம் தேதி இந்திய நேரப்படி கிட்டத்தட்ட இரவு 11 மணிவரையில் ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட இந்திய அணியை பாகிஸ்தான் சாய்த்தது கிடையாது.

152 ரன்கள் எடுத்தால் வரலாற்றில் முதன்முறையாக ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்தியாவைச் சாய்க்கலாம் எனும் இலக்கோடு களமிறங்கிது பாகிஸ்தான்.

தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வானும், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசமும் களமிறங்கினர்.

முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அதில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் வைத்து கச்சிதமாக ஆட்டத்தை தொடங்கியது ரிஸ்வான் – பாபர் இணை.

இரண்டாவது ஓவரை ஷமியிடம் கொடுத்தார் கோலி – பலனில்லை. மூன்றாவது ஓவரை பும்ரா வீசினார் – விக்கெட் விழ வில்லை.

நான்காவது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தியை அழைத்தார். அவரால் ரன்களை கட்டுப்படுத்த முடிந்ததே தவிர இணையை பிரிக்க முடியவில்லை.

ஆரம்ப ஓவர்களில் விக்கெட் வேட்டையை தொடங்கவேண்டும் எனும் முனைப்போடு முதல் நான்கு ஓவர்களில் நான்கு பேரை பந்துவீச வைத்த உத்தி, பலன் தரவில்லை. பவர்பிளே முடிவிலேயே விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது இந்த இணை.

பந்துவீச்சாளர்கள் மாறிக்கொண்டிருந்தார்களே தவிர இந்த இரு இணையும் உடும்புப்பிடியாய் விக்கெட்டை காத்துக் கொண்டிருந்ததால், ஆட்டம் அதிவேகமாக பாகிஸ்தான் பக்கம் நகரத் தொடங்கியது.

ஒரு ரன் அவுட்டில் இருந்து நடுவரின் தீர்ப்பு ஒன்றால் முகமது ரிஸ்வான் தப்பிப்பிழைத்தார். அதைத்தவிர இந்தியாவுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் இந்த இணை வழங்கவே இல்லை. குறிப்பாக அனைத்து பந்துவீச்சாளர்களையும் பாரபட்சமின்றி தவறான பந்துகளை வீசினால் தண்டித்தார்கள்.

நிதானமாக நின்று விளையாடி, 18வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து வைத்தது இந்த இணை. இரு வீரர்களும் அரை சதம் விளாசினர். ஷமி வீசிய பதினெட்டாவது ஓவரில் முதல் ஐந்து பந்துகளிலேயே 17 ரன்களை இவ்விருவரும் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாக்கூர், அனுபவ வீரர் அஷ்வின் வெளியே அமர்ந்திருக்க, இத்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அசைக்க முடியாமல் தவிக்க, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் உள்ளது. இன்னும் ஸ்காட்லாந்து, ஆஃப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்த நான்கில் இன்னும் ஒரு தோல்வி ஏற்பட்டால் கூட இந்திய அணியின் அரை இறுதி கனவு மங்கிவிடும் வாய்ப்புண்டு.

இத்தகைய சூழலில் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. மறுபுறம் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை நெருங்க முதல் அடியை வெற்றிகரமாக எடுத்துவைத்துவிட்டது.

போட்டி முடிந்தபிறகு பேசிய விராட் கோலி இது இந்த தொடரில் எங்களுக்கு முதல் போட்டி. கடைசி போட்டியல்ல என குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சக்திஶ்ரீ கோபாலன்