எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் இந்தியா – சீனா 8-வது சுற்று பேச்சு

இந்திய – சீன ராணுவ உயரதிகாரிகள் விரைவில் 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

லடாக் எல்லையில் சீன தரப்பில் சுமார் 60,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஈடாக இந்திய வீரர்களும் எல்லையில் எதற்கும் தயார் நிலையில் உள்ளனர். அதிநவீன ஆயுதங்களும் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

போருக்கு தயார் நிலையில் இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் வீரர்களுக்கு உத்தரவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்கையில், ‘‘இந்திய ராணுவம் எந்நேரமும் போருக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

லடாக்கின் பான்காங் ஏரி உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் ஆதிக்க நிலையில் உள்ளது. முக்கிய மலைமுகடுகள் இந்தியாவின் வசம் உள்ளன. சீன வீரர்கள் பள்ளத்தாக்கு பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். எனவே சீன படைகளின் நடமாட்டத்தை இந்திய ராணுவம் கண்காணித்து அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பிஜிகே மேனன் பங்கேற்கிறார். அவரோடு மத்திய வெளியுறவு துறை இணைச் செயலாளர் நவீன் வஸ்தவாவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.

எல்லையில் சீன வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.