விவசாயி இறந்தது கூட தெரியாமல் அனல் பறக்க பேசிய சிந்தியா?

பாஜக பொதுக்கூட்டத்தில் விவசாயி இறந்தது கூட தெரியாமல் மாநிலங்களவை உறுப்பினர் சிந்தியா மக்களிடையே உரையாற்றியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் காந்துவா மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு பேசவிருந்தார். அப்போது, அங்கிருந்த விவசாயி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

விவசாயி உயிரிழந்தது குறித்து தெரியவந்தபோதிலும், சிந்தியா பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து முந்தி காவல் நிலைய பொறுப்பாளர் அந்திம் பவார் கூறுகையில், “சந்த்பூர் கிராமத்தை சேர்ந்த ஜிவான் சிங் (70) என்ற முதியவர் முந்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது, அவரின் உடல்நிலை மோசமடைந்து, மயங்கி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது” என்றார்.உள்ளூர் தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் பொதுக்கூட்டத்திற்கு வந்த சிந்தியாவிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த விவசாயிக்காக அவர் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார். விவசாயிகள் நலனில் சிந்தியாவும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் கவனம் செலுத்துவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் அருண் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.