திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல்..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இதற்கிடையில், ஆங்காங்கே பணப்பட்டுவாடா புகார்களும் எழுந்துவருகின்றனர்.

வருமான வரித்துறையினரும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருக்கும் சந்திரசேகர் அ.தி.மு.க சார்பில் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு நெருக்கமாக உள்ளவர்களின் வீடுகளில் நேற்றிரவு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், எம்.எல்.ஏவிடம் நீண்ட காலமாக ஜேசிபி ஓட்டுநராக உள்ள வலசுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமியின் வீட்டில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு 500 மற்றும் 2,000 நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

நள்ளிரவு 10 மணி முதல் சோதனை நடத்திய அதிகாரிகள் அதிகாலை 4.20 மணிக்கு ஒரு கோடி ரூபாயையும் அட்டைப் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர். எம்.எல்.ஏ சந்திரசேகரின் கார் ஓட்டுநர் கொண்டு வந்து கொடுத்த பணத்தை வைத்திருந்ததாக அழகர்சாமி கூறியதாக தெரிகிறது. வலசுப்பட்டியைச் சேர்ந்த தங்க பாண்டியன், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் வீடுகளில் நடந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.