யூ டியூப் பார்த்து கள்ளநோட்டு தயாரித்த நபர் கைது!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சில கடைகளுக்கு வந்த நபர் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்கள் வாங்கிவிட்டு மீதி சில்லறை வாங்கி சென்றுள்ளார். அடையாளம் தெரியாத அந்த நபர் கொடுத்த பணத்தை பார்த்தபோது அது கள்ள நோட்டு என்பது கடை உரிமையாளர்களுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடை உரிமையாளர்களிடம் விசாரணைமேற்கொண்டார். அப்போது கடை உரிமையாளர்கள் கள்ள நோட்டு கொடுத்து பொருள்களை வாங்கி சென்ற நபர் கூறித்து சில அடையாளங்களை தெரிவித்தனர்.

காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது, சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கள்ள நோட்டுகளும், கள்ளநோட்டுகள் கொடுத்து மாற்றிய மீதி பணம் இருப்பது தெரியவந்தது.

பின்னர், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இலியாஸ்(35), என்பதும் இவருக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் யூ டியூப் பார்த்து பிரத்யேகமாக ஒரு ஜெராக்ஸ் மெஷின் ஒன்றை வாங்கி வைத்துகொண்டு அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கடைகளில் கொடுத்து மாற்றி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இலியாலிடமிருந்து இரண்டு கள்ள நோட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை செய்தனர். அங்கு கள்ள நோட்டுகள், ஜெராக்ஸ் மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வீட்டு வாடகை செலுத்த வேண்டும் என்பதற்காகவும், விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற கள்ளநோட்டை மாற்றியதாக இலியாஸ் வாக்கு மூலம் அளித்துள்ளார் .