மூடப்படும் ஐசிஐசிஐ வங்கி

பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ, இலங்கையில் தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய வங்கிகளில் ஒன்றாக ஐசிஐசிஐ வங்கி திகழ்கிறது. இந்தியாவைத் தாண்டியும் அமெரிக்கா, கத்தார், சீனா போன்ற நாடுகளிலும் ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது.

அதன்படி, இலங்கையிலும் ஐசிஐசிஐ வங்கி தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தனது செயல்பாடுகளை நிறுத்த அனுமதிக்க கோரி அந்நாட்டின் மத்திய வங்கியிடம் ஐசிஐசிஐ வங்கி விண்ணப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த இலங்கை மத்திய வங்கி, இலங்கையில் வங்கியின் வணிக நடவடிக்கைகளை நிறுத்தவும் வங்கிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

அக்டோபர் 23ஆம் தேதி முதல் இலங்கையில் தனது வங்கிச் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.