கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துக்கு வரி முழுவதும் ரத்து- நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

அமைச்சர்கள் குழு வழங்கிய அனைத்து பரிந்துரைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர் மாஸ்க் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்படும். கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு வரி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. டோசிலிசுமாப் மருந்துக்கும் வரி இல்லை.