18ஆவது முறையாக திட்டமிட்ட தேதியில் மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணை வரலாற்றில் திட்டமிட்ட தேதியில் இதுவரை 17 முறைகள் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது 18ஆவது முறையாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் மூலமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. முதலில் குறுவை சாகுபடியும், தொடர்ந்து சம்பா தாளடி நெல் பயிர் சாகுபடியும் செய்யப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருக்கும்பட்சத்தில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். எனவே, அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். இதற்காக மேல்மட்ட மதகு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அங்கிருந்து மின் விசையை இயக்கி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர், அணையின் மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலமாக பாசனத்திற்கான தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கால்வாயில் பாய்ந்து வந்த தண்ணீரை மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கி வரவேற்றார்.