வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார்

வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தில் எந்தவொரு அரசியல் பார்வையையும் கொண்டிருக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால் விவசாயிகளை தியாகம் செய்வதன் மூலமோ அல்லது விவசாயிகளின் நலனை புண்படுத்துவதன் மூலமோ அல்லது விவசாய பொருளாதாரத்தின் விலையிலோ ஏதாவது அரசியல் இருக்க வேண்டுமா? என்று புதிய தலைமுறை சிந்திக்க வேண்டும்.

விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது. விவசாயிகளை மதிப்பதில் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எனவே வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.

அதற்காக இந்த சட்டங்களில் குறைபாடு இருப்பதாக அர்த்தம் அல்ல. விவசாயிகள் தொடர்ந்து போராடுவதால், அவர்களின் உணர்வுகளை மதித்தே இந்த பரிந்துரையை அரசு கூறியுள்ளது.