பானிபூரியால் பெண் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணி தேவி (34). பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மூன்று தினங்களுக்கு முன்பு ரோகிணி தேவிக்கு அவரது சகோதரர்கள் இருவர் பானிபூரி வாங்கி கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

அந்த பானிபூரியை (Pani Puri) சாப்பிட்ட ரோகிணி தேவி சற்று நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் உடற்சோர்வு காரணமாக படுத்து தூங்கிய அவர் மறுநாள் காலையிலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் மேற்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரோகிணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ரோகிணியின் தந்தை, தனது மகள் பானிபூரி சாப்பிட்டு சிறிது நேரத்தில் வாந்தி எடுத்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ரோகிணி தேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இறப்புக்கான காரணம் கண்டறிவதற்காக உடல் உறுப்புகள் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பானி பூரிக்கடை மூடப்பட்டது.

இதையும் படிங்க: வி.ஏ.ஓ.,வுக்கு கத்திக்குத்து