தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது !

தமிழகத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது .கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.

கவர்னர் உரையில்,விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

சமூக நீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதி, இட ஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வாய்ப்பு, கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் முன்னேற்றம் ஆகிய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்த அரசு தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசு பதவியேற்றுள்ளது. இந்த மாமன்றத்தில் அறுபதாண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவராக அவர் திகழ்ந்தார். அவர் நம்முடன் இன்று இல்லை என்றாலும், அவருடைய கொள்கைகள் இந்த அரசை எப்போதும் வழிநடத்திச் செல்லும் என்று கூறினார்.

தமிழகத்தின் நிதிநிலை கவலையளிக்கும் நிலையில் இருப்பதாகவும், நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்க ஜூலை மாதம் வெள்ளை அறிக்கையை இந்த அரசு வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு மீண்டும் அமைக்கப்படும் என்றார்.