கடும் பணியிலும் போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்

வேளாண் சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகள், அங்கே பெய்த மழையால் கூடாரத்தில் தஞ்சம் அடைந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் எதித்து டெல்லி எல்லையில், ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராடும் விவசாயிகளுக்கு, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள், மற்றும் பிற அமைப்புகள் சார்பில் உணவு, படுக்கை, கூடாரம் உள்ளிட்ட, பலதரப்பட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் போரட்டத்திற்கு ஆதரவும் அதிகரித்து வருகின்றது.

இதுவரையில், அரசு தரப்பில் நடத்தப்பட்ட 6 சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 3 சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் சமீப நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவுகின்றது. இதனை பொருட்படுத்தாமல் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது மழை பெய்யத் தொடங்கி இருக்கின்றது.

இதனால், டெல்லி மற்றும் நொய்டா எல்லைகளை இணைக்கும் சில்லா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மழைப்பொழிவில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், பனி, மழை என எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை எதிர் கொண்டு தங்களை தற்காத்துக் கொள்வோம் என்றும் மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.