அக்.7ஆம் தேதி முதல் புறநகர் ரயில், தியேட்டர்கள் இயக்கப்படுமா?:முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் 8-வது கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ஆம்தேதி முதல் வரும் 30ஆம் தேதி (நாளை) வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனினும் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 8ஆவது கட்ட ஊரடங்கு நாளையுடன் (30ம் தேதி) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது அல்லது கூடுதலாக புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கூட்டத்தில், தமிழகத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் இந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் கடந்த 6 மாதத்திற்கும் மேல் தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. தியேட்டர்களை அக்டோபர் மாதம் முதல் திறக்க அனுமதி அளிப்பது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுதவிர, தற்போது கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 8 மணி என்று இருப்பதை இரவு 9 மணி வரை அதிகரிப்பது, பள்ளிகள் திறப்பது, சென்னையில் மின்சார ரயில்களை இயக்க மத்திய அரசிடம் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தளர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. மற்ற அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மருத்துவர்களுடனான ஆலோசனைக்கு பின் என்ன? தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு இன்று மாலை அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here