ஷேக் ரஸ்ஸல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இளவேனில்!

ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஷேக் ரஸ்ஸல் சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டின் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வங்கதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு ஆன்லைன் மூலமாக ‘ஷேக் ரஸ்ஸல் சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப் 2020’ என்ற போட்டியைத் தொடங்கியது.

இதில் இந்தியா சார்பாக உலகின் நம்பர் ஒன் வீராங்கனை இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் 627.5 புள்ளிகளைப் பெற்று, தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். மேலும் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.74 ஆயிரம் (1000 டாலர்கள்) வழங்கப்பட்டது.

மேலும் இந்தியா சார்பில் பங்கேற்ற ஷியோரி ஹிராட்டா, 622.6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். அவருக்குப் பரிசுத்தொகையாக ரூ.51ஆயிரம் (700 டாலர்கள்) வழங்கப்பட்டது.