திமுகவால் ஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது- எடப்பாடி

சென்னை அசோக் நகரில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு திமுக உறுப்பினர்களால் அநியாயம் நிகழ்ந்தது என்றும் தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் திமுகவினர் தாங்கள் செல்லும் கடைகளில் எல்லாம் பணம் தராமல் கடைக்காரர்களை மிரட்டி அடித்து வருவது வாடிக்கை ஆகி விட்டதாகவும் விமர்சித்தார்.

மேலும் வீடு இல்லாத மக்களுக்கு நாங்கள் வீடு கட்டிக் கொடுப்போம் என்றும் தற்போது சென்னை மாநகரம் முழுவதும் தூய்மை நகரமாக மாறி இருக்கிறது என்றும் தெரிவித்தார் ஆனால் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது தூய்மைக்காக என்ன செய்தார் எனவும் கேள்வி எழுப்பினார்..