பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் 1990-களிலும் அதற்குப் பிறகும் அறிமுகமான இயக்குநர்களில் ஆகப் பெரிய உயரத்தை அடைந்திருப்பவரும் இந்திய சினிமாவின் மிக வெற்றிகரமான திரைப் படைப்பாளிகளில் ஒருவரும் தமிழ்த் திரையில் பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதை படத்துக்குப் படம் நிகழ்த்திக் காட்டுபவருமான இயக்குநர் ஷங்கர் இன்று (ஆகஸ்ட் 17) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஏழைகளுக்குக் கல்வி கிடைக்காமல் இருப்பது (ஜெண்டில்மேன்), அரசு அலுவலகங்களில் லஞ்சம் (இந்தியன்) ஊழல்(சிவாஜி, முதல்வன்), தனிநபர்களின் பொறுப்பின்மையால் சமூகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சினைகள் (அந்நியன்) என மக்களைப் பாதிக்கும் தீவிரமான பிரச்சினைகளைக் கையாளும் ஷங்கர் படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களிலும் குறைவைப்பதே இல்லை.

ரஜினி, கமல், விஜய், விக்ரம் போன்ற நட்சத்திரங்களுடன் பணியாற்றும்போது அவர்களுடைய இமேஜுக்கும் அது சார்ந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற காட்சிகளையும் வசனங்களையும் திரைக்கதையின் தேவைக்கேற்ப அழகாக உருவாக்கி இணைக்கும் ஷங்கரின் வல்லமை அபாரமானது. அதே நேரம் ரஜினிக்கு ‘எந்திரன்’, விஜய்க்கு ‘நண்பன்’ போல் உச்ச நட்சத்திரங்களை வழக்கத்துக்கு மாறான கதைக் களத்திலும் கதாபாத்திரத்திலும் பொருத்தி அவற்றையும் மிகப் பெரிய வெற்றிப் படமாக்குவது ஷங்கரின் தனித் திறமை.