2ஜி மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. – மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 2017 டிசம்பரில் தீர்ப்பு அளித்தார்.

குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறி விட்டது என்று அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018, மார்ச் மாதம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஏற்று, 2ஜி வழக்கு விசாரணை அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் நடைபெறும் என கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி அறிவித்தார். இதன்படி நேற்று விசாரணை தொடங்கியது. அந்த விசாரணையில், மேல் முறையீடு செய்ய சிபிஐ-க்கு மத்திய அரசு அளித்த அனுமதி கடிதத்தை அளிக்க வேண்டும் என்றும், சி.பி.ஐ கையேட்டை சி.பி.ஐ-யே கடைபிடிப்பதில்லை என்றும் எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த சி.பி.ஐ. தரப்பு, “சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்தது நிர்வாக ரீதியானது. நிர்வாக ரீதியான ஆவணம் என்பதால் எதிர்மனுதாரர்களுக்கு தர வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தது. இதனை தொடர்ந்து இன்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில், வழக்கு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here