கேரளாவில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு

கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு லாக்டவுன் அமல்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களை கண்காணிப்பதில் சுணக்கம் காணப்படுகிறது. வீட்டில் குணமடையும் நோயாளிகள் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றுவதில்லை, அதனால் தான் கேரளாவால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

நாட்டின் மிக உயர்ந்த தினசரி தொற்றுள்ள மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று உயர்ந்து வருவதால் அண்டை மாநிலங்களிலும் அதன் தாக்கத்தை உணர முடிகிறது. இதனால் தினசரி தொற்று உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு ‘ஸ்மார்ட்’ ஆன குறிப்பிட்ட முறையில் லாக்டவுனை அமல்படுத்தலாம்.

நுண் கட்டுப்பாட்டு மண்டலங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், தாலுகா அளவில் கூட கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம். குறிப்பிட்ட பகுதிகளில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.