குழந்தைக்கு வாங்கிய டெய்ரி மில்க் சாக்லேட்டில் பீடித்துண்டு – திண்டுக்கலில் பரபரப்பு

குழந்தைக்கு வாங்கிய டெய்ரி மில்க் (dairy milk) சாக்லேட்டில் பீடித் துண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று உறவினர் குழந்தைக்கு பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இருந்த டீக்கடையில் பத்து ரூபாய்க்கு டெய்ரி மில்க் சாக்லெட் ஒன்றினை வாங்கியுள்ளார்.

அதன் பின் சாக்லேட்டின் கவரை கிழித்து குழந்தைக்கு கொடுத்த போது அதில் குச்சி போன்ற ஏதோ பொருள் தென்படவே, கடை முன்பு டியூப் லைட் வெளிச்சத்தில் பார்த்துள்ளார். அந்த சாக்லேட்டில் பாதி புகைத்த பீடி துண்டு ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கமலக்கண்ணன் கடைக்காரரிடம் பீடி துண்டு இருப்பது குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு கடை ஊழியர் லட்சுமணன், இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது வேண்டுமென்றால் வேறு சாக்லேட் கொடுக்கிறேன் என்று கூறி பீடித் துண்டு இருந்த சாக்லேட்டை திரும்ப தர வலியுறுத்தியுள்ளார். ஆனால் சாக்லேட்டினை திரும்பத் தர விரும்பாத கமலக்கண்ணன் இதுபற்றி உண்மை தன்மையை அறிந்து கொள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்தார்.

உடனடியாக கடைக்கு வந்த மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் பீடி துண்டு இருந்த சாக்லேட் மற்றும் அந்தக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டெய்ரி மில்க் சாக்லேட்டுகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் சாக்லேட் வாங்கிய கமலக்கண்ணிடம் எழுத்து பூர்வமாக புகார் மனு பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஜெயராமன் அறிவுறுத்தலின் பேரில், சாக்லேட் விற்பனை செய்த, திண்டுக்கல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள செல்வராஜ் ஸ்டோர் மற்றும் திண்டுக்கல் டெய்ரி மில்க் மொத்த விற்பனை செய்யும் நாகல் நகர் பகுதியில் உள்ள ஜி.எம் மார்க்கெட்டிங் பிரதிநிதிகளிடம் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது, டெய்ரி மில்க் நிறுவன அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கிறோம் என நழுவி விட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட உணவு அதிகாரிகள் பீடி துண்டு இருந்த சாக்லேட்டினை பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு விளக்கம் கேட்டு தனித்தனியே நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.அகில இந்திய அளவில் பிரசித்தி பெற்ற டெய்ரி மில்க் சாக்லேட்டில் பீடி துண்டு இருந்தது திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.