தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி – முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நவ.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் 31.10.2020 முடிய பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:

புதிய தளர்வுகள்

1) பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி
செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

2) பள்ளி /கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

3) கோயம்பேடு வணிக வளாகம்:

தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், 2.11.2020 முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக 16.11.2020 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

4) பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5) சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

6) திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து திரையரங்குகளை திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (அரடவiயீடநஒ), வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி 10.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

7) மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு
நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த அனுமதிக்கப்படுகிறது.

8) பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 10.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

9) நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

10) ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1.11.2020 முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக்
கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.