கரோனாவை வென்றார் கால்பந்து சாம்பியன் ரொனால்டோ!

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது கரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளார்.

சமகால கால்பந்து உலகில் மிக முக்கிய கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் தற்போது ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரில் கலந்துகொள்ள செல்லும்போது ரொனால்டோவிற்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அவர் சுயதனிமைப்படுத்துதலில் இருந்தார். இந்நிலையில் சுமார் 19 நாள்களுக்குப் பின், அவர் தற்போது கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜுவென்டஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இனிமேல் அவர் சுயதனிமையில் இருக்க வேண்டிய தேவை இல்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.