அமெரிக்காவில் மீண்டும் உச்சம் தொட்ட கரோனா; ஒரே நாளில் ஒரு லட்சம் பாதிப்பு!

கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் அதிகளவு ஏற்பட்ட பாதிப்பு இதுவாகும்.

ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. உலகளவில் இதுவரை நான்கு கோடியே 58 லட்சத்து 98 ஆயிரத்து 590 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 93 ஆயிரத்து 744ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 821ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து லட்சத்து 76 ஆயிரத்து 931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 501 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் பாதிப்பு பதிவாகியுள்ளது. கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் அதிகளவு ஏற்பட்ட பாதிப்பு இதுவே முதல் முறையாகும்.

இதுவரை அந்நாட்டில் 93 லட்சத்து 16 ஆயிரத்து 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 159 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதேபோல் பிரான்ஸ், ஜெர்மனி ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.