மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!

Covid Cases In India : அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு
அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் 50 பேருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதே போல மதுரை, கள்ளக்குறிச்சியில் மாணவர்களுக்கு கொரோனா பரவி வருவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்தது. இதனையடுத்தே 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 30ஆம் தேதி மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் கொரோனா நிலவரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, நாடு முழுவதும் கொரோனா நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது. கேரளாவில் கூட குறைந்து விட்டது. ஆனால், அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் பண்டிகை காலங்கள் என்பதால், கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும்போது உஷாராக இருக்க வேண்டும். இதுவரை கிடைத்த பலனை வீணாக்கி விடக்கூடாது. மக்கள் நெரிசலான இடங்கள்தான், கொரோனா பரவுவதற்கு எளிதான இடங்களாகும். ஆகவே, பண்டிகைகளை பொறுப்புடன் கொண்டாட வேண்டும். பயணங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி பணம்