நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்திற்கு இடைக்காலத் தடை !

நடிகர் விஜய்யின் சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் விலக்கு கேட்ட வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, நுழைவு வரியை ஒரு வாரத்தில் கட்ட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

மேலும் நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த நீதிபதி நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்று கூறி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் மேல்முறையீட்டில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருக்கப்பட்டது.

இதில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.மேலும் எஞ்சியுள்ள 80 சதவீத நுழைவு வரியை ஒரு வாரத்துக்குள் நடிகர் விஜய் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.