இரண்டு தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டால் 98 % பாதுகாப்பு உறுதி

பஞ்சாப் அரசு, சண்டிகர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி உயர் படிப்பு சார்பு ஆகியவை இணைந்து பஞ்சாப் மாநில காவல்துறையினரிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கை குறித்து பேசிய நிதிஆயோக் சுகாதார உறுப்பினர் டாக்டர் விகே.பால் கூறியதாவது;

“4,868 போலீசார் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளவில்லை. இவர்களில் 15 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர். ஒரே ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்ட 35,856 போலீசாரில் 9 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட 42,720 போலீசாரில் கொரோனா தொற்று காரணமாக இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு போலீசார் எளிதாக பாதிக்கபடுகின்றனர் என்பதால் அவர்கள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் வாயிலாக ஒரே ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டால் 92% பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளும்போது 98% பாதுகாப்பு கிடைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது சாதகமான விளைவையே ஏற்படும், எனவே அதனை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு நிதிஆயோக் சுகாதார உறுப்பினர் டாக்டர் விகே.பால் கூறினார்.