அரசியல் ஆக்கப்படும் கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பாகும்.

அதேபோல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம்
உருவாக்கி வருகிறது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனாலும், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் நம்பகத்தன்மை குறித்து மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிருஷ்ணா யல்லா இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,

கோவாக்சின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்திருப்பது இந்தியாவில் வைரஸ் தடுப்புசிகள் தொடர்பான மிகப்பெரிய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி தேவைப்படும் உலகின் உள்ள அனைவருக்கும் இந்த தடுப்பூசியை கொண்டு சேர்பதே எங்கள் நோக்கம். கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரதச்சத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பானது என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசியும் தற்போது அரசியலாக்கப்பட்டுவிட்டது. எனது குடும்பத்தை சேர்ந்த எவரும் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயல்படவில்லை என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவாக்சின் பரிசோதனையை நாங்கள் இந்தியாவில் மட்டுமே செய்யவில்லை. இங்கிலாந்து, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் உள்பட 12 நாடுகளில் நாங்கள் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையை செய்து வருகிறோம்.