Corona virus: ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு

Corona virus: இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதால் தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று பாதிப்பு 2½ லட்சத்தை நெருங்கி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,47,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் பாதிப்பு 1.94 லட்சமாக இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 27 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

மேலும் 3-வது அலையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக நேற்றைய பாதிப்பு அமைந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 11.5 சதவீதத்தில் இருந்து 13.11 ஆக உயர்ந்தது.

நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 46,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில், புதிய பாதிப்பு 11,647-ல் இருந்து 16,420 ஆக உயர்ந்தது.

டெல்லியில் தினசரி பாதிப்பு 29 சதவீதம் உயர்ந்து புதிதாக 27,561 பேருக்கு தொற்று உறுதியானது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதிக்கு பிறகு ஒருநாள் பாதிப்பில் அதிகம் ஆகும். டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 26 சதவீதத்தை தாண்டி உள்ளது.

மேற்கு வங்கத்தில் 22,155, கர்நாடகாவில் 21,390, தமிழ்நாட்டில் 17,934, கேரளாவில் 12,742, உத்தரபிரதேசத்தில் 13,592 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் மேலும் 380 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 199 பேர் அடங்குவர்.

கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 4,85,035 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 1,41,701 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 84,825 பேர் முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 15 ஆயிரத்து 361 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 31-ந் தேதி நிலவரப்படி, 1.04 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 11,17,531 ஆக உயர்ந்துள்ளது.

இது நேற்று முன்தினத்தை விட 1,62,212 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 76,32,024 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 154 கோடியே 61 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் இதுவரை 69.73 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்று மட்டும் 18,86,935 மாதிரிகள் அடங்கும்.

இதையும் படிங்க: Actor Dileep: நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை