இந்தியா கொரோனா மூன்றாம் அலையை தடுக்குமா?

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. தற்போது இரண்டாம் அலையில் இருந்து மீண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

ஆனால் அடுத்த சில மாதங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கலாம் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

மாநில அரசுகள் எந்த அளவுக்கு கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கின்றன என நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. சில நிபுணர்கள் அடுத்த 12 – 16 வாரங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை வரலாம் என எச்சரித்து இருக்கிறார்கள். மற்ற சிலரோ கொரோனாவின் புதிய திரிபான டெல்டா பிளஸ், கொரோனா தடுப்பூசியை பலவீனமாக்கும் என தங்கள் கவலையைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ‘வேரியன்ட் ஆஃப் கன்சர்ன்’ என்கிற கவலைக்குரிய டெல்டா திரிபோடு தொடர்புடையது தான் இந்த டெல்டா பிளஸ் என்கிற கொரோனா வைரஸ் திரிபு. டெல்டா திரிபு தான் இந்தியாவின் இரண்டாம் அலைக்கு காரணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.